தென்னைநார்க் கழிவு உரம்... நீங்களே தயார் செய்யலாம்
தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க… தேங்காய் மட்டைகளைப் பதியம் போடுவது குறித்தும், இதில் சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். தேங்காய் மட்டைகளை எப்படி சேமித்து பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள பொன் வரிகளாகும். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்ப்பதமான தீமை என்ற ஒன்று இருப்பது நிச்சயம். எந்த ஒரு பொருளும் இரண்டு விதமான வினைகளை ஆற்றும். அதை நாம் அணுகுவதைப் பொறுத்துதான் நன்மையாகவும் தீமையாகவும் மாறும்.
தேங்காய் மட்டைகள் மற்றும் தென்னை மட்டைகள், விவசாயத்துக்கு நன்மை பயக்கக்கூடிய இயற்கை பொருள்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சரியாகக் கையாளவில்லை என்றால், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். இவற்றில் ‘டானின்’ என்ற வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. எனவே, தென்னந்தோட்டத்தில் இவற்றைக் குவித்து வைத்தால், இவை சிதைந்து மட்குவதற்கான காலம் அதிகமாகும். காலம் கடந்து சிதைவடைவதால், மீத்தேன் போன்ற சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படலாம். இது காலநிலை மாற்றத்துக்குக் காரணமாகிவிடும். முறையற்ற வகையில் குவிக்கப்படும் தேங்காய் மட்டைக் கழிவுகளால் வடிகால் அமைப்புகள் அடைபடு வதற்கான வாய்ப்புகளும் அதிகம். இதனால், கனமழைக் காலங்களில் வெள்ளநீர் தேங்குதல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். மேலும், நீண்ட நாள் குவியல், நோய் பரப்பும் காரணிகளையும் ஈர்க்கும்.
தென்னை மட்டைகளை எரிக்கலாமா?
தேங்காய் மட்டைகளை எரிப்பது என்பது அறவே கூடாது. இதை எரித்தால் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற மாசுகள் அதிக அளவில் வெளியேறி, நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்து, பாதிப்புகளை ஏற்படுத்தும். தென்னை மட்டைகள் மற்றும் தேங்காய் மட்டைகளைத் தோட்டங்களில் குவித்து வைத்தாலோ, எரித்தாலோ, மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மடிந்துவிடும். மழைக்காலங்களில் இந்தக் குவியல்களின் வழியாக நீர் உட்புகுந்து தேவையற்ற வேதியியல் திரவங்களை மண்ணில் கலக்கச் செய்யும். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மண்ணின் அமில மற்றும் காரத்தன்மை, நடுநிலையை இழக்க நேரிடும். இதனால் மண்ணில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், மடிந்து போகும். ஆகவே, நிலப்பரப்புகளில் ஆங்காங்கே… பதப்படுத்தாத தென்னை மட்டைகள் மற்றும் தேங்காய் மட்டைகளை குவியல்களாக வைக்கக் கூடாது. மட்க வைக்கும் தொழில்நுட்பம் வாயிலாக, இவற்றை உரமாக்குவது நல்லது.
தேங்காய் மட்டை மற்றும் தென்னை மட்டை மேலாண்மை…
தேங்காய் மட்டை மற்றும் தென்னை மட்டை என்பது, நெருக்கமாகப் பின்னிப் பிணையப்பட்ட நார்களின் தொகுப்பாகும். இவை மிகவும் அடர்த்தியாக இருப்பதால், உடைந்து சிதைவதற்கும், சிதைந்தவை நல்ல தரத்துடன் உரமாவதற்கும் அதிக நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. மேலும், மட்டைகளில் அதிக அளவிலான நார்கள் இறுக்கமாக இருப்பதால், அவற்றின் அடர்த்தி மிகுந்தும், அவை அடங்கியுள்ள பரப்பளவு குறைந்தும் இருக்கும். முதலில் இந்த இறுக்கத்தை குறைத்தால்தான், நீர்சேமிப்பு அல்லது உரமாக்குதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். நார்களின் இறுக்கத்தைக் குறைக்க, 1 - 2 செ.மீ அளவுள்ள சிறிய துண்டுகளாக, அவற்றைக் கையால் பிரிக்கலாம். அல்லது தேங்காய் மற்றும் தென்னை மட்டைகளிலிருந்து நார்களைப் பிரித்தெடுப்பதெற்கென பிரத்யேக மாக உருவாக்கப்பட்டுள்ள `ஸ்ரடர்’ (Shredder) கருவியைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி, அடர்த்தியைக் குறைக்கலாம்.
நார்களைப் பதப்படுத்துதல்…பன்முறை வடிகட்டுதல்…
சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட நார்களை ஊறல் போடுவதற்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர்த்தொட்டி தேவை. 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரம், 3 மீட்டர் நீளம் கொண்ட தொட்டி அமைக்க வேண்டும். இந்தத் தொட்டியின் அடித்தளம் 4 - 6 சதவிகிதம் சாய்வாக இருக்க வேண்டும். கழிவுநீர் விரைவாக வடிந்து, வெளியேற சாய்வுதளம் உதவும். துகள்களாக்கப்பட்ட நார்களை இத்தொட்டியில் போட்டு தண்ணீர் நிரப்ப வேண்டும். ஊறவைத்தல் மற்றும் வடிகட்டுதல் செயல்பாடுகள் 4 நாள்களுக்குத் தொடர வேண்டும். அதாவது, காலை 6 மணியளவில் ஊறல் போட்டு, மாலை 6 மணியளவில் கழிவுநீரை முழுவதுமாக வடித்துவிட்டு, மீண்டும் நீர் நிரப்பி, மறுநாள் காலை 6 மணியளவில் வடித்து விட வேண்டும். இப்படி நான்கு நாள்களில் 8 முறை கழிவுநீரை வடித்து விடுவதால் அதிலுள்ள 87 முதல் 95 சதவிகிதத்திலான தேவையில்லாத வேதியியல் திரவங்கள் வெளியேற்றப்படும். இம்முறையில் நார்களின் நீர் உறிஞ்சுதிறன் 95% வரை மேம்படுத்தப்படும். அதன்பிறகு, இதை அப்படியே நீர் சேமிப்பு பயன்பாட்டுக்கோ, மட்க வைத்து உரமாகவோ பயன்படுத்தலாம்.
ஒரு முறை வடிகட்டுதல்…
நான்கு நாள்களில்… 8 முறை தண்ணீர் நிரப்புதல் மற்றும் கழிவுநீர் வெளியேற்றுதல், தங்களுக்கு சிரமம் எனக் கருதினால், ஒரு தடவை மட்டும் வடிகட்டும் முறையைத் தங்களுக்கு சொல்லித் தருகிறேன். துண்டு களாக்கப்பட்ட தேங்காய் நார்களை, (ஏற்கெனவே சொன்னவாறு) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர்த்தொட்டியில் ஒரு வாரம் தொடர்ச்சியாக ஊறவைத்து, ஏழாம் நாள், கழிவுநீரை ஒட்டுமொத்தமாக வடித்து வெளியேற்றலாம். இந்த முறையைப் பின்பற்றினால், 65% - 75% வேதியியல் திரவங்கள் வெளியேறிவிடும். நார்களின் நீர் உறிஞ்சுதிறன் 70% - 75 சதவிகிதம் மேம்படும். குறைவான உழைப்புக்கு, சற்றுக் குறைவான பலன் கிடைப்பதென்பது இயல்புதானே.
இந்த இரண்டு விதமான வடிகட்டும் முறைகளில் ‘பன்முறை வடிகட்டுதல்’ முறையே மிகவும் சிறந்தது. இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட நார்கள், விரைவான சிதைவுக்கு உள்ளாகி, எளிதில் மட்கி, உரமாக மாறும்... பன்முறை வடிகட்டுதல் முறையைக் கடைப்பிடிக்க, மெனக்கிட முடியாத நிலையில் இருக்கும் விவசாயிகள், ஒரு தடவை மட்டும் வடிகட்டும் முறையைப் பின்பற்றியாவது தென்னை நார்களைப் பதப்படுத்துதல் நன்று. பதப் படுத்தப்படும் தேங்காய் மட்டை மற்றும் தென்னை மட்டைகள், நீர் சேமிக்கும் தழைக்கூள பயன்பாட்டுக்கோ, உரமாக்கும் பயன்பாட்டுக்கோ தயாராகிவிட்டது என்பதை அறிந்துகொள்ள, ஓர் எளிய வழிமுறை உள்ளது. ஊறல் போட்டு, கழிவுநீர் வடிக்கப் பட்ட, தென்னை நார் தொகுப்பிலிருந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒரு வாளியில் இட வேண்டும். அதில் 10 லிட்டர் தண்ணீர் நிரப்பி, ஓர் இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை பார்க்கும்போது, வாளியில் உள்ள நீர், வெண்மை கலந்த இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அந்த நார்களை நேரடியாகத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஒருவேளை, வாளியில் உள்ள நீர், கருமை கலந்த காபி நிறத்திலோ, பழுப்பு நிறத்திலோ இருந்தால், தென்னை நார்கூளத்தை மீண்டும் ஊறல் போட்டு வடிகட்ட வேண்டும்
உரமாக்கும் வழிமுறைகள்
பன்முறை வடிகட்டுதல் அல்லது ஒரு முறை வடிகட்டுதல் மூலம் பதப்படுத்திய தேங்காய் மட்டை நார் அல்லது தென்னை மட்டைகளை, பின்வரும் தொழில்நுட்பம் மூலம், ஊட்டமேற்றிய உரமாகத் தரம் உயர்த்தி பயன்படுத்தலாம்.
அடுக்கு முறை உரமாக்கல்…
அடுக்கு முறையில் மட்க வைக்கும் தொழில்நுட்பத்தைக் கையாண்டு, தென்னை நார்களை... நீர் சேமிப்பு மற்றும் உர பயன்பாட்டுக்குத் தயார் செய்யலாம். இந்த முறையில் அடுக்கடுக்காக நார்களைக் குவித்து, உரக்குவியல் அமைப்பதற்கும், அடுக்குக் கலவைகளைத் திருப்புவதற்கும் போதுமான இடவசதி தேவை. முதல் கட்ட நடவடிக்கையாக, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட தென்னை நார்களை, நான்கு முதல் ஐந்து அடி உயரத்துக்கு அடுக்குமுறையில் இடலாம்.
உரக்குவியலின் அளவீடுகள்
உரக்குவியலை குறைந்தபட்சம் 4 - 5 அடி உயரத்துக்கு அமைப்பது நல்லது. இதன்மூலம் வெப்பத்தைத் தக்கவைத்து உரம் தயாரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தலாம். உரக்குவியலின் நீள, அகல மற்றும் உயரமானது முறையே 10 அடி × 3.5 அடி × 4 அடியாக இருக்க வேண்டும். இந்த அளவு முறையில் முதலில் ஓர் அடி உயரம் வரை பதப்படுத்தப்பட்ட தென்னைநார்களை பரப்பி, அதன் மேற்பரப்பில் உணவுக்கழிவுகள், நார்களை விரைவாக சிதைக்க உதவும் சிப்பிக் காளான் விதைகள் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை தூவி விட வேண்டும். இக்கலவையை ஒன்றின் மீது ஒன்றாக மூன்று அடுக்குகள் ஏற்படுத்த வேண்டும். 4 - 5 அடி உயரத்துக்கு, இந்த உரக்குவியல் அமைக்கப்பட வேண்டும்.
செறிவூட்டப்பட்ட உரம்
தேங்காய் மட்டை நார்களை, வேறு சில மட்கும் பொருள்களுடன் அதாவது, உணவுக் கழிவுகள், சிப்பிக் காளான் விதைகள், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றுடன் கலந்து, அடுக்கடுக்காக உரக்குவியல் உருவாக்குவதன் மூலம் உரம் ஊட்டம் பெறும். தேங்காய் நார்களை மற்ற பொருள்களுடன் சேர்த்து சிதைப்பதன் மூலம், செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்து நிறைந்த உரமாக, அவற்றை மேம்படுத்த முடியும். விரைவான சிதைவுக்கு கரிமம் (கார்பன்) மற்றும் நைட்ரஜன் 25:1 என்ற விகிதாசாரத்தில் இருக்க வேண்டும். மேற்கண்ட உரக்குவியலில், இந்தச் சமநிலையை உருவாக்க உணவுக்கழிவுகள் உதவி புரியும்.
காற்றோட்டம் ஏற்படுத்துதல்…
உரக் குவியலில் காற்றோட்டம் மற்றும் சீரான சிதைவை அனுமதிக்க, 10 - 14 நாள்களுக்கு ஒரு முறை, இக்குவியலை புரட்டி விட வேண்டும். துளையிடப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் அல்லது இரும்புக் குழாய்களை உரக் குவியலில் செங்குத்தாகவும் கிடை மட்டமாகவும் செருகி வைப்பதன் மூலம் இலகுவான காற்றோட்டத்தை உறுதி செய்யலாம். உரக் குவியல்களுக்குள் சிதைவடைதலை ஊக்கப்படுத்துவதற்கான நுண்ணுயிர் பெருக்கத்துக்கு காற்று முக்கிய பங்களிப்பு செய்யும்.
ஈரப்பத - மேலாண்மை…
உரக் குவியலில் எப்போதும், போதுமான ஈரப்பதம் இருப்பது மிகவும் அவசியம். அதேசமயம், எக்காரணம் கொண்டும் நார்கள் நீரில் மூழ்கியது போன்றோ, அதிகமான ஈரத்துடனோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மட்கும் திறன் பாதிக்கும். உரக் குவியல் சரியான ஈரப்பதத்துடன் அதாவது, 50% - 60% இருந்தால் மட்டுமே நார்கள் மட்குவதற்குத் தேவையான நுண்ணுயிர் பெருக்கம் சீராக நிகழும். அதிகமான நுண்ணுயிர்கள் பெருகினால் சிதைவடையும் நிகழ்வு விரைவுபடுத்தப்படும். ஒரு வேளை நாரின் ஈரம்பதம் 17% - 12% குறைந்தாலோ, நார்கள் மிகவும் உலர்ந்துவிட்டாலோ மட்க வைத்தலுக்கு உதவக்கூடிய நுண்ணுயிர்கள் மடிந்துவிடும். இதனால், நார்கள் சிதைந்து மட்குவதற்கான காலம் அதிகமாகும்.
சரியான ஈரப்பதத்தில் உள்ளதா? தெரிந்துகொள்வதற்கான வழிமுறை!
உரக்குவியல், சரியான ஈரப்பதத்தில் (50% - 60%) உள்ளதா என அறிந்துகொள்ள, அதிலிருந்து சிறிது எடுத்து நம் உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து அழுத்திப் பிழிய வேண்டும். இப்படி செய்யும்போது, ஒரு சொட்டு தண்ணீர்கூட கசியக் கூடாது. ஆனால், கலவையில் ஈரம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், உரக்குவியல் சரியான ஈரப் பதத்துடன்தான் உள்ளது என்பதை உறுதி செய்யலாம். ஈரம் குறைவாக இருந்தால், பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்கலாம். ஒருவேளை, ஈரம் அதிகமாக இருந்து, தண்ணீர் கசிந்தால், அடுத்த சில தினங்களுக்கு தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi