பூச்சிகளில் மிக முக்கியமானது கறையான். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்வதில் கறையானுக்கு நிகர் எதுவும் கிடையாது. கறையான் எறும்பு மாதிரியே இருக்கும். ஆனால், எறும்பு கிடையாது. இது கரப்பான்பூச்சி குடும்பத்துக்கு நெருக்கமானது என்று சொன்னால் நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும். எறும்புகள்போல கூட்டமாகச் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டவை. ஆனால், நிறம் மட்டும் வெள்ளையாக இருக்கும். அதனால், இது வெள்ளை எறும்பு என்றும் அழைக்கப்படுகிறது.
கறையான் ஒரு தூய்மைக் காவலர்
மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளில் கறையானுக்கு முக்கிய பங்குண்டு. இது, வயல்வெளிகளில் நடத்தும் தாக்குதலைவிட வீடுகள், கட்டடங்களில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. 2,750 வகையான கறையான்கள் இருந்தாலும், 10 சதவிகித கறையான்கள்தான் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், கறையான் என்ற உயிரினம் இல்லையென்றால், இந்த உலகம் குப்பைமேடாக மாறிவிடும் என்பதுதான் பகைமுரண்! பட்டுப்போன மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, தாவரக் கழிவுகள் மட்குவதற்குக் காரணமாக இருப்பவை கறையான்கள்தான். மண்ணில் இருக்கும் கறையான்கள் புற்று கட்டும். மரக்கட்டையில் இருக்கும் கறையான்கள் கூடு கட்டும்.
புற்றுக் கறையானுக்கு ஈரப்பதம் தேவை. அதனால் மண்ணுக்குக் கீழே குறைந்தபட்சம் 6 அடி ஆழத்தில் இருக்கும் ஈரப்பதத்தைப் பொறுத்துதான் புற்றுகளைக் கட்டும். ஆனால், மண்ணுக்குக் கீழே எத்தனை அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதைத் தெரிந்துதான் கறையான்கள் புற்று கட்டும் என்று சொல்லப்படுவதெல்லாம் கட்டுக்கதை. மரக்கட்டையில் இருக்கும் கறையானுக்கு குறைந்தளவு ஈரப்பதம் இருந்தாலே போதும். அதனால்தான் மரக்கட்டைக் கறையானைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது. கதவு, ஜன்னல்களை ஈரப்பதம் இல்லாத அமைப்பில் கட்டடங்கள் கட்டினால் போதும், கறையான் பிரச்னையை 75 சதவிகிதம் கட்டுப்படுத்தலாம். ஒரு கூட்டுக்குள்ளோ, புற்றுக்குள்ளோ 5,000 முதல் 5 லட்சம் கறையான்கள் வரை இருக்கும். அதிலும் இனப்பெருக்கம் செய்யும் கறையான்கள், வேலைக்கார கறையான்கள், போர் புரியும் போர்வீரர் கறையான்கள் என்று மூன்று வகைகள் இருக்கின்றன.
ராணி கறையான்தான் முட்டையிடும்
இதில் வேலை செய்யும் கறையான்களுக்கும், போர் புரியும் கறையான்களுக்கும் கண் தெரியாது. இறக்கை கிடையாது. கண் தெரியாமல், இறக்கைகள் இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய அற்புதமான புற்றுகளைக் கட்டுகின்றன என்பதுதான் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உண்மை. இந்த மூன்று வகை கறையான்களைத் தவிர, ராணி கறையான், ஆண் கறையான் ஆகியவையும் அந்தப் புற்றில் இருக்கும். பெரும்பாலும் ஒரு புற்றில், ஒரு ராணி கறையான்தான் இருக்கும். சில புற்றுகளில் இரண்டு, மூன்று ராணி கறையான்கள்கூட இருக்கும். ஆனால், ஒரு ராணி கறையான்தான் முட்டையிடும் வேலையைச் செய்யும். அந்த ராணி கறையானுக்கு ஏதாவது ஆகிவிட்டால் மீதம் இருக்கும் ராணி கறையான்களில் ஒன்று முட்டையிடும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். ராணி கறையானுக்கு முட்டை போடுவது மட்டும்தான் வேலை. ஒரு நாளைக்கு 2,500 முதல் 40,000 முட்டைகள் வரை போடும். புற்றுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு, அதில் இருக்கும் கறையான்கள் அழிந்துவிட்டால் ராணி கறையானின் முட்டை போடுகிற திறன் அதிகமாகும். ராணி கறையான் எல்லா நாளும் 5,000 முட்டைகளையோ, 40,000 முட்டைகளையோ போடுவது கிடையாது. புற்றில் இருக்கும் மூன்று வகையான கறையான்களின் எண்ணிக்கையும் குறையாமல் சமநிலையில் பராமரிப்பதற்காக முட்டைபோடும். இது அறிவியலுக்கே எட்டாத அதிசயம். இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
துப்பி கறையான்
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், முட்டையில் இருந்து வெளியே வரும் வரைக்கும் ஒன்றாகத் தான் இருக்கின்றன. வளர்நிலையை அடையும்போதுதான் இனப்பெருக்கம் செய்யக்கூடிய கறை யானாகவோ, வேலைக் கார கறையானாகவோ, போர் கறையானாகவோ மாற்றமடைகின்றன. இளம் புழு பருவத்தில் வித்தியாசம் ஒன்றும் தெரியாது. இளம் புழுக்கள் வளர்ச்சி அடையும் நிலையில்தான் வித்தியாசம் தெரியும். அதிலும் வேலைக்கார கறையானுக்கும், போர்வீரர் கறையானுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றன. போர் வீரர் கறையானுக்கு தலை மட்டும் பெரிதாக இருக்கும். வாய் முன்பக்கம் நீட்டிக்கொண்டு இருக்கும். அதாவது, போர் செய்யும்போது எதிரியை கடித்து துப்புவதற்கு ஏற்ற மாதிரி இருக்கும். போர்வீரர் கறையான்களிலேயே ‘கடிக்கும் கறையான்கள்’, எதிரிகள் மீது ரசாயனங்களை துப்பி விரட்டும் ‘துப்பி கறையான்கள்’ என இரண்டு வகைகள் இருக்கின்றன.
கறையான் புற்றுக்குள் உள்ள உலகம் பிரமாண்டமானது. கறையான்கள் மனிதர்களுக்கு 3 விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளன. பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பி, அதில் பலவிதமான அறைகளை உருவாக்கும் முறை. முட்டையைப் பாதுகாக்க ஓர் அறை, அதிலிருந்து வெளி வரும் புழுக்களைப் பாதுகாக்க ஓர் அறை, பெரிதாக வளர்ந்ததும், அதைப் பராமரிக்க ஓர் அறை, உணவுத் தயாரிப்புக்கூடம் எனப் பலவிதமான அறைகளைக் கட்டும் முறை என மூன்று விஷயங்களை கொடுத்துள்ளது.
உலர்ந்த, பட்டுப்போன, முழு ஈரப்பதம் இல்லாமல் பாதி ஈரப்பதத்தோடு இருக்கும் மரக்கட்டைகளில் உள்ள செல்லுலோஸை மட்க வைக்கும் வேலையைத்தான் கறையான் செய்கிறது. கறையானின் உடலில் மரக்கட்டைகளில் உள்ள ‘செல்லுலோஸ்’ஸை மட்க வைக்கும் நேரடி ‘ஆர்கனிசம்’ இல்லை. உடலில் இருக்கும் ‘புரோட்டோசோவா’, பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களுக்குத் தேவையான ‘செல்லுலோஸ்’, ‘குளுக்கோஸாகவும், ஜீரண தண்ணீராக’வும் மாற்றப்படுகிறது. கறையான் உடலில் இருக்கும் பூஞ்சைக்காளான் போன்ற கிருமிகள், இந்த ஜீரணத் தண்ணீரை குடிக்கிறது. கறையான் குளுக்கோஸை சாப்பிட்டு வளர்கிறது.
கறையானுக்கு இறக்கை முளைத்தால் ஈசல்
பெரும்பாலும் கறையான்களுக்கு உணவை சுயமாக உண்ணத் தெரியாது. ஒரு கறையான், இன்னொரு கறையானுக்கு உணவை ஊட்டிவிடும். இப்படி ஊட்டிவிடுவதன் மூலமாக கறையானின் குடலில் இருக்கும் பூஞ்சைக்காளானை ஒத்த கிருமிகள் மற்ற கறையானுக்குள் போய்விடும். உணவை ஊட்டும்போது கிருமிகளையும் சேர்த்து ஊட்டும். உணவை வாய்வழியாக மட்டுமல்ல... ஆசனவாய் வழியாவும் ஊட்டும். ராணிக் கறையானுக்கும் சாப்பிடத் தெரியாது. வேலைக்கார கறையான்தான் ஊட்டிவிடும். இந்த வேலைக்கார கறையான்கள்தான் உணவு தயாரிப்புக் கூடத்தில் பூஞ்சைக் காளானை உற்பத்தி செய்யும் வேலையையும் காளான் தோட்டங்களைப் பராமரிக்கும் பணியையும் செய்கின்றன.
மழை பெய்யத் தொடங்கும் காலத்தில் நிலவும் வெளிப்புற சீதோஷ்ண நிலை, ஈரப்பதமான காற்று, பௌர்ணமி வெளிச்சம் என அனைத்தும் ஒன்று சேரும்போது புற்றிலிருந்து கறையான்கள் வெளியேறுவதற்கு ஒரு சூழலை உருவாக்கும். அந்த நேரத்தில்தான் கறையான்களுக்கு இறக்கை முளைக்கும். இப்படி இறக்கை முளைத்த கறையானைத்தான் ஈசல் என்று சொல்கிறோம். கறையானும் ஈசலும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே.
ஒரு புற்றிலிருந்து வெளியேறப்போகும் கறையான்களுக்கு உள்ளுணர்வு மூலமாக இறக்கை முளைக்க ஆரம்பித்துவிடும். இறக்கை முளைத்த கறையான், ஈசலாகி புற்றிலிருந்து வெளியேறும் இடத்தில் போய் நிற்கும். வெளியே நிலவும் சீதோஷ்ண நிலையைப் பார்த்து லட்சக்கணக்கில் புற்றிலிருந்து வெளியேறும் கறையான்கள் ஈசல்களாகப் பறக்கும். ஆண், பெண் சேர்ந்த கலவையாக இந்தக் கறையான்கள் பறக்கும். இப்படி வெளிவரும்போது காக்கா, குருவி, ஓணான், பருந்து, பல்லி பல உயிர்களுக்கும் உணவானது போக அதிகபட்சம் 3 முதல் 4 ஜோடிகள்தான் தப்பி பிழைக்கும். புற்றிலிருந்து வெளியே வரும் ஈசல்கள் காற்றின் வேகத்தில் அடித்து செல்லப்படும். புற்றில் இருந்து சிறிது தூரமோ, சில கிலோமீட்டர் தள்ளியோ ஒரு தோதான இடம் கிடைக்கும்போது ஆணும் பெண்ணும் இணை சேரும். பிறகு, இறக்கைகளை உதிர்த்து, கறையான்களாக மாறி, புற்றைத் கட்டத் தொடங்கும். பெண் கறையான் முட்டை போட ஆரம்பிக்கும். ஆண் கறையான் தேவையான இடத்தைத் தயார் செய்துவிடும். முட்டைகளிலிருந்து வெளியே வரும் வேலைக்கார கறையான், போர்வீரர் கறையான்கள்தான் அடுத்த குழுவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கறையான் புற்று ஓர் இயற்கை ஏ.சி
கறையான் புற்று தரையில இருந்து எத்தனை அடி உயரம் இருக்கிறதோ அதே அளவுக்கு தரைக்குக் கீழேயும் இருக்கும். கீழே சென்று ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் சீதோஷ்ண நிலையை சரியாகப் பராமரிக்க வேண்டும். அந்த வகையில் மனித குலத்துக்கு ‘ஏசி’-யைக் கண்டுபிடித்துக் கொடுத்ததும் கறையான்கள் தான். வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உட்புற சீதோஷ்ண நிலையைப் பராமரிக்க வேண்டும். வெளியே வெப்பமாக இருந்தால் உள்ளே குளிராக இருக்க வேண்டும். வெளியே குளிர்ச்சியாக இருந்தால் உள்ளே வெப்பமாக இருக்க வேண்டும். வெளிக்காற்று உள்ளே வர வேண்டும் என்பதற்காக கறையான் புற்றில் ஆங்காங்கே ஓட்டைகள் இருக்கும். இந்த ஓட்டைகள் வழியாகத்தான் காற்று உள்ளேயும் வெளியேயும் போய் வரும். 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டில் ‘ஈஸ்ட் கேட்’ என்ற கட்டடத்தை ‘ஏசி’ இல்லாமல் இயற்கை முறையில் கறையான் புற்று மாதிரி வடிவமைத்துள்ளார்கள். இரண்டு கட்டடங்களை இணைக்கும் இடங்களில் கண்ணாடி மறைப்பைப் பயன்படுத்தி, வெப்பக்காற்றை உருவாக்கி, கீழே இருந்து குளிர் காற்றையும் உருவாக்கி யிருக்கிறார்கள். கட்டடம் முழுவதும் ஓட்டைகளை உருவாக்கி, அதன் வழியாகக் காற்றை அனுமதித்து, கட்டடம் முழுவதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையைப் பராமரிக் கிறார்கள்.
கறையான் உற்பத்தி
கறையானுக்கு எங்கே போவது? என யோசிக்க வேண்டாம். சின்ன மண்பானை எடுத்து, அதற்குள் உலர்ந்த சாணம், வைக்கோல், சாக்கு, பழைய துணியைப் போட்டு அதில் தண்ணீர் தெளித்து எங்கு ஈரப்பதம் இருக்கிறதோ, அந்த இடத்தில் கவிழ்த்து வைத்தால் மூன்றே நாள்களில் அந்தப் பானையில் கறையான்கள் ஏறிவிடும். புற்றில் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரை கறையான்கள் இருக்கும். கறையான் புற்றைத் தோண்டி எடுத்தால் 50 கிலோ அளவுக்கு கறையான்கள் கிடைத்திருக்கின்றன. வீட்டில் உடைந்துபோன ‘பிவிசி’ குழாயில் ஆங்காங்கே ஓட்டை போட்டு, அந்தக் குழாய்க்குள் பழைய துணி, சாக்கு, உலர்ந்த சாணம், வைக்கோல் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து மண்ணுக்குள் சொருகி விட்டாலும் கறையான்கள் குழாய்க்குள் ஏறிவிடும். செம்மண் பகுதிகளில் கறையான்கள் அதிகமாக இருக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi