“நிலக்கடலை செடிகளில் எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், அதை அலட்சியமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், அசுவினி பூச்சிகளின் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியே, எறும்புகளின் நடமாட்டம். இதனால், கணிசமான அளவு மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
எனவே, எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக செடிகளை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக, இலைகளின் அடிப்பாகத்தைப் பார்த்தால், அங்கு, அசுவினிப் பூச்சி குடிகொண்டிருக்கும். இது மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய பூச்சி இனமாகும். நிலக்கடலை செடிகளில் உள்ள இளம் தளிர்கள்,
முதிர்ந்த இலைகள், குருத்துகள் மற்றும் பூக்களிலும் அசுவினி பூச்சிகள் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சும். இதனால், செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகள் சுருங்குவதோடு, மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கும். பூக்கள் உதிரும்.
கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் அசுவினிப் பூச்சிகள், ஒரு வித திரவத்தைச் சுரக்கும். இனிப்புச் சுவை கொண்ட இத்திரவத்தை சுவைப்பதற் காகவே எறும்புகள் வரும். இத்திரவம் பட்ட பகுதிகளில் கறுப்பு நிறத்தில் பூஞ்சைகள் உருவாகும்.
இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும். அதிக எண்ணிக்கையிலான எறும்புகள் கடலைப் பிஞ்சுகள் மற்றும் காய்களில் சேதத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேற்கண்ட காரணங்களால், 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எறும்புகளின் நடமாட்டம் தென்படத் தொடங்கியதுமே, அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
10 லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி வீதம் வேப்ப எண்ணெய் கரைசல் கலந்து தெளிக்கலாம். செடிகளின் வேர்ப் பகுதிகளில் ஏக்கருக்கு 50 கிலோ வீதம் வேப்பம்பிண்ணாக்கு இடலாம். வரும் முன் காப்போம் நடவடிக்கையாக, வளர்ச்சிப் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் ஏற்கெனவே சொல்லிய அளவில் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்கலாம். வேர்ப் பகுதிகளில் வேப்பம்பிண்ணாக்கும் கொடுக்கலாம். அசுவினிப் பூச்சிகளை சாப்பிட்டு, அழிக்கக்கூடிய பொறி வண்டுகளை ஈர்க்க, மஞ்சள் அட்டைகள் வைக்கலாம்.”
Comments
Post a Comment
Smart vivasayi